Print this page

திரு. படேலின் வைதீகம். குடி அரசு - செய்தி விளக்கம் - 20.12.1931 

Rate this item
(0 votes)

திப்பாரா ஜில்லா மாஜிஸ்திரேட்டை இரண்டு மாணவிகள் அக்கிரமமாகச் சுட்டுக்கொன்ற கொடுஞ் செயலைக்கண்டிக்கும் பொருட்டு பம்பாயில் பெண்களின் கண்டனக்கூட்டம் ஒன்று கூடிற்று. அதில் காங்கிரஸ் தலைவர் திரு. வல்லபாய் படேல் அவர்கள் பேசும் போது கீழ்க்கண்டவாறு கூறினார். 

“இது மிகவும் கொடிய குற்றம். இந்தியப் பெண்களின் பரம்பரை வழக்கத்திற்குத் தகுந்த செய்கையாகாது. இந்தியப்பெண்கள் சமூகத்திற்கே இது ஒரு நீங்காத பழியாகும். அவர்களுடைய புகழுக்கே கேடு விளைக்கின்றது. உயிர்களை அழிக்கக்கூடிய கருவிகளைப் பெண்கள் கையில் எடுப்பதே தகாத காரியம். உயிரை உற்பத்தி செய்வதும் காப்பாற்றுவதுமே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையேயன்றி, கொல்லும்படி கட்டளையிடப்படவில்லை" என்பது திரு. படேல் அவர்களின் பேச்சு. இதிலுள்ள அபிப்பிராயங்களில் கொலை செய்யும் அக்கிரமத்தன்மையைக் கண்டிக்கும் சொற்கள் முழுவதையும் நாம் பாராட்டுகிறோம். இவ்வாறு கொலை செய்த-வெறி பிடித்த பெண்களின் கொடுந்தன்மையை நாம் பலமாகக் கண்டிக்கின்றோம். 

ஆனால் “உயிரை உற்பத்தி செய்வதும் அதைக் காப்பாற்றுவதுமே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை” என்று கூறிய பழய வைதீக அபிப்பிராயத்தை நாம் சிறிதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். பெண்கள் பிள்ளை பெற்று வளர்க்கக்கூடிய வெறும் யந்திரங்கள் அல்லர். அவ்வாறு யந்திரங்களாக வைக்கப்பட்டிருப்பதும் தவறு; ஆண் மக்களின் சுய நலம்; இந்து மதத்தின் ஆபாச வழக்கமாகும். பெண்கள் ஆண்களைப்போலவே சகல உரிமைகளையும் பெறத்தகுதியுடையவர்கள் என்பது திரு. படேல் அவர்களின் பரந்த அறிவுக்குத் தோன்றாமல் போனதைக்கண்டு ஆச்சரியப்படுகின்றோம். 

குடி அரசு - செய்தி விளக்கம் - 20.12.1931

Read 72 times